இறைவனின் தாயாக இன்று நாம் கொண்டாடும் மிகவும் புனிதம் நிறைந்த மரியாவின் தாய்மை மொழியினை நமதாக்கி அவர் நம்மிடம் பேசும் மொழி என்ன என்பதை சிந்திப்போம் . திருத்தந்தை
இறைவனின் தாயாக இன்று நாம் கொண்டாடும் மிகவும் புனிதம் நிறைந்த மரியாவின்
தாய்மை மொழியினை நமதாக்கி அவர் நம்மிடம் பேசும் மொழி என்ன என்பதை
சிந்திப்போம் என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி
1, இஞ்ஞாயிறன்று, மூவேளை செப உரையைத் துவக்கினார்.
அன்பான சகோதரர் சகோதரிகளே, இந்நன்னாளில் உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன். புத்தாண்டின் தொடக்கம் கடவுளின் தாயாக நாம் கொண்டாடி மகிழும் அன்னை
மரியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில், டிசம்பர்
31-ஆம் தேதி காலை இவ்வுலகை விட்டுப் பிரிந்து இறைப்பதம் அடைந்த முன்னாள்
திருத்தந்தை
16-ஆம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற வேண்டிக் கொள்வோம்.
நற்செய்தி மற்றும் திருஅவையின் உண்மையுள்ள பணியாளரைப் பரிசாகக் கொடுத்தக்
கடவுளுக்கு ஒரே இதயத்துடனும் ஒரே உள்ளத்துடனும் ஒன்றிணைந்து நன்றி
சொல்வோம்.
இயேசு பிறந்த தொழுவத்தில் மரியாவைப் பற்றி நாம் சிந்திக்கும்போது நற்செய்தி வாசகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அன்னை மரியா எதுவும் பேசவில்லை. வியப்புடன் இறைவனின் மறைபொருளை அனுபவிக்கின்றார். அவர் தன் இதயத்தில் உள்ள அனைத்தையும் அன்பு செய்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, நற்செய்தி கூறுவது போல், தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பற்றிக் கவலைப்படுகின்றார். ‘கிடத்தப்பட்டிருந்த’ என்ற இந்த வினைச்சொல் கவனமாக வைப்பதைக் குறிக்கின்றது. குழந்தையை மென்மையாகக் கவனித்துக்கொள்ளும் அன்னை மரியாவின் செயல், அவரின் மேன்மையைக் குறிக்கின்றது. வானதூதர்கள் இறைப்புகழ் இசைக்கும்போதும், இடையர்கள் ஓடி வந்து உரத்த குரலில் பாடிப் புகழும்போதும் மரியா எதுவும் பேசவில்லை. தனக்கு நிகழ்ந்த அனைத்தையும் விளக்கி, விருந்தினர்களை உபசரித்து, அந்த நிகழ்வுகளில் தன்னை முதன்மைப்படுத்தவில்லை. மாறாக, குழந்தை இயேசுவை முன்னிலைப்படுத்துகின்றார். அன்புடன் கவனித்துக்கொள்கிறார். கவிஞர் ஒருவர் எழுதியதற்கேற்ப மரியாவிற்கு மெளனமாக இருப்பது எப்படி என்று கூடத் தெரியும். ஏனெனில் அவர், கடவுளின் பார்வையினின்று விலக விரும்பவில்லை. ஆதலால் தான் அமைதியாக குழந்தை இயேசுவின் அருகில் இருந்து இறைவனின் மறைபொருள் அனைத்தையும் மனதிற்குள் அனுபவிக்கின்றார்.
தாய்மை மொழி
தாய்மை மொழியால் குழந்தை இயேசுவை மென்மையாகக் கவனித்துக்கொள்கின்றார்
மரியா. ஒன்பது மாதங்கள் தங்களது வயிற்றில் ஒரு மறைபொருளான விந்தையின்
பரிசைத் தாங்கிய பிறகு, அன்னையர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து தங்கள் குழந்தைகள்மீது தங்களின் முழு
கவனத்தையும் செலுத்துகிறார்கள். நேரத்திற்கு உணவளித்தல், கைகளில் தாங்கிப் பிடித்துக் கொள்ளுதல், மெதுவாகத் தொட்டிலில் கிடத்துதல் போன்ற தாய்மையின் மொழியைப்
பயன்படுத்துகின்றார்கள்.
சகோதரர் சகோதரிகளே, அனைத்து அன்னையர்களைப் போலவே, அன்னை மரியாவும் தன் வயிற்றில் உயிர் பெறுகின்றார். புத்தாண்டு நன்றாக
இருக்க வேண்டும் என்றால், நம்பிக்கையை மீள்கட்டமைக்க விரும்பினால், நமது மொழியையும், செயல்பாடுகளையும், ஆணவத்தால் ஈர்க்கப்பட்ட நமது தனிப்பட்ட தேர்வுகளையும் நாம் கைவிட்டு, அன்பின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்னை நமக்கு இன்று
நினைவூட்டுகிறார். அன்புடன், அர்ப்பணிப்புடன், நம் வாழ்க்கையை, நேரத்தை, ஆன்மாவைக் கவனித்துக் கொள்வோம். நாம் வாழும் சுற்றுச்சூழலை, நமக்கு அடுத்திருப்போரை, கடவுள் நம்மோடு சேர்த்து வைத்தவர்களை, தேவையில் இருக்கும் நமது சகோதரர் சகோதரிகளைக் கவனித்துக் கொள்வோம். உலக
அமைதி நாளைக் கொண்டாடி, எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பில்
விழிப்புணர்வை மீண்டும் பெறுவோம். நாம் வாழும் தனிப்பட்ட மற்றும் சமூக
நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கையில், போரின் அவலங்களை எதிர்கொண்டு, உலகின் சவால்களைப் பொறுப்புணர்வு மற்றும் இரக்க உணர்வுடன் எதிர்கொள்ள
அழைக்கப்படுகின்றோம். நாம் ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொள்ளும்போதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது பொதுவான இல்லத்தைக் காக்கும்போதும் இதனைச்
செய்ய முடியும்.
அவநம்பிக்கை மற்றும் அலட்சியத்தால் மாசுபடுத்தப்பட்டுள்ள இன்றையச்
சூழலில், தேவையான போதெல்லாம் மற்றவர்களை மிகவும் நெருக்கமாகவும் கருணையுடனும்
பார்க்கும் திறன் கொண்டவர்களாக வாழ்வதற்கு, கடவுளின் தாயாம் மரியாவின் அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக